ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை


ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே கடன் தர மறுத்த ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டு பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே கடன் தர மறுத்த ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டு பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடன் கேட்டு தாக்குதல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆலோரை கக்கன் நகர் குடியிருப்பை சேர்ந்தவர் மோசஸ் மனோகரன். டிரைவர். இவரது மனைவி ஜோதிமணி (வயது 34). இவர்களுக்கு மென்சி, மேகா என 2 மகள்கள் உள்ளனர். ஜோதிமணி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜார்ஜ். இவரது மனைவி எஸ்தர் (30). இதற்கிடையே எஸ்தரும், அவரது மாமனாரான மணி (74) ஆகியோர் கடன் தொல்லைக்கு ஆளாகினர்.

இதனால் அவர்கள் 2 பேரும் ஜோதிமணியிடம் தங்களுக்கு கடன் தருமாறு கேட்டு உள்ளனர். அதற்கு கணவர் வந்தவுடன், கடன் வழங்குவது குறித்து கேட்ட பின்னர் தருவதாக ஜோதிமணி கூறி கடன் தர மறுத்தார். இதனால் ஜோதிமணிக்கும், எஸ்தர் உள்ளிட்ட 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தகராறு முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்தரும், மணியும் சேர்ந்து ஜோதிமணியை தாக்கி உள்ளனர்.

கழுத்தை நெரித்து கொலை

இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதால், மயங்கி விழுந்தார். பின்னர் எஸ்தர், மணி 2 பேரும் சேர்ந்து ஜோதிமணியை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

மேலும் இந்த கொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காகவும், அதனை மறைக்கவும் மாமனாரும், மருமகளும் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் ஜோதிமணி உடலை வைத்து மூடி உள்ளனர்.

இதையடுத்து நீண்ட நேரமாக மனைவி வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த மோசஸ் மனோகரன் தேடி பார்த்தார். அப்போது ஜோதிமணி பாழடைந்த வீட்டில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அருவங்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கடன் தர மறுத்த ஆசிரியையை எஸ்தர், மணி 2 பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story