புத்தாண்டை வரவேற்று சாக்பீசில் செதுக்கிய ஆசிரியர்
புத்தாண்டை வரவேற்று ஆசிரியர் சாக்பீசில் செதுக்கியுள்ளாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே அதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் அத்தியூர்திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீது ஒருவித பற்றுடன் இருந்து வந்துள்ளார். கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து வித்தியாசமான முறையில் ஓவியங்கள், சிற்பங்கள் செய்ய ஆரம்பித்துள்ளார். பொட்டுக்கடலை, அவல், அரிசி, நெல், பனை ஓலை, மாத்திரை, சாக்பீஸ் போன்ற பொருட்களில் பல்வேறு உருவங்கள் வடிவமைப்பது, பல்பின் உள்வாட்டமாக ஓவியங்கள் வரைவது, ரோஜா இதழ்களில் ஓவியம் வரைவது, அரசமர இலையில் ஓவியம் வரைவது போன்ற பல வித்தியாசமான முறைகளில் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார். தற்போது இவர், ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக வித்தியாசமான முறையில் சாக்பீசில் ஹாப்பி நியூ இயர் 2023 என 4 புறமும் மிகவும் நுணுக்கமாக வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து ஓவிய ஆசிரியர் கண்ணன் கூறுகையில், ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக வித்தியாசமான முறையில் சாக்பீஸின் 4 பக்கமும் ஹாப்பி நியூ இயர் 2023 என செதுக்கி உள்ளேன். இதற்காக சாக்பீசில் ஊசியை கொண்டு செதுக்குவதற்கு குறைந்தபட்சம் எனக்கு 4 மணி நேரம் ஆகிறது. இதன் நோக்கம் என்னவென்றால் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், கலையில் புதுப்புது யுக்திகளை ஓவியர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கையாள வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாகவும் இதனை செதுக்கியுள்ளேன் என்றார்.