டிராக்டர் மோதி ஆசிரியரின் மகன் பலி
திண்டிவனம் அருகே டிராக்டர் மோதி ஆசிரியரின் மகன் பலியானார்.
திண்டிவனம்:
திண்டிவனம்-மரக்காணம் சாலை அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 49). இவர், ஆட்சிப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அஸ்வின்(10). இவன், திண்டிவனம் புனித அன்னாள் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் சுந்தரமூர்த்தியும், அஸ்வினும் மோட்டார் சைக்கிளில் சலவாதி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி அஸ்வின், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானான். சுந்தரமூர்த்தி காயமடைந்தார். தன் கண்முன்னே மகன் பலியானதை கண்டு சுந்தரமூர்த்தி கதறி அழுதார்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அஸ்வின் உடலை பிரேத பரிசோதனைக்காகவும், சுந்தரமூர்த்தியை சிகிச்சைக்காகவும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.