மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்


தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை மாலை அணிவித்து இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை மாலை அணிவித்து இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் கோடைகால விடுமுறை முடிந்து கடந்த 12-ந் தேதி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. அதுபோல் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் கோடைகால விடுமுறை முடிந்து நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

இனிப்பு வழங்கினர்

குறிப்பாக வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளிக்கு இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளை பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர் ராணி தலைமையில் ஆசிரியர்கள் பன்னீர் தெளித்தும், மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். அதுபோல் புதிதாக சேர்க்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் அவரவர் பெற்றோர்களின் மடியில் வைக்கப்பட்டு அரிசியில் தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான அ எழுதவும் கற்பித்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளும் அந்தந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர்.

அடம் பிடித்த குழந்தைகள்

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். பல பள்ளிகளில் பள்ளிக்கு போக மாட்டேன் என கூறி குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பெற்றோர்களின் கையைப் பிடித்துக் கொண்டும் சேலையின் முந்தானை பிடித்துக் கொண்டு அழுதபடி பள்ளிக்கு வந்த சம்பவங்களும் நடைபெற்றன.

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் சாரட் வண்டியில் குழந்தைகள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.

ராமநாதபுரத்தில் உள்ள ஒரு சில அரசு பள்ளிகளில் குழந்தைகள் தொடர்ந்து விடாமல் அழுது கொண்டே இருந்ததால் பெற்றோர்களும், குழந்தைகளுடன் சேர்ந்து நேற்று முதல் நாளில் அந்த வகுப்பறையில் குழந்தைகளுக்காகவே அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story