பக்தர் வழங்கிய தேக்கு மரம் 4 ஆண்டுகளாக வீணாக கிடக்கும் அவலம்


பக்தர் வழங்கிய தேக்கு மரம் 4 ஆண்டுகளாக வீணாக கிடக்கும் அவலம்
x
தினத்தந்தி 2 Sept 2022 11:02 PM IST (Updated: 2 Sept 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

தோப்புத்துறை வரதராஜபெருமாள் கோவிலுக்கு கொடிமரம் அமைக்க பக்தர் வழங்கிய தேக்கு மரம் 4 ஆண்டுகளாக வீணாக கிடக்கிறது. எனவே கொடி மரம் அமைக்க அறநிலையத்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

தோப்புத்துறை வரதராஜபெருமாள் கோவிலுக்கு கொடிமரம் அமைக்க பக்தர் வழங்கிய தேக்கு மரம் 4 ஆண்டுகளாக வீணாக கிடக்கிறது. எனவே கொடி மரம் அமைக்க அறநிலையத்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரதராஜ பெருமாள் கோவில்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ராமாயணம் காலத்திற்கு முன்பே உள்ளதாக கூறப்படுகிறது.

ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு இந்த கோவிலில் உள்ள திருமாலை வழிபட்டதாகவும், கோவிலின் முகப்பில் அவர் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்ததாகவும் கூறப்படுகிறது.

கொடி மரம் பழுதடைந்தது

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா, சொர்க்கவாசல் திறப்பு, கஜேந்திர மோட்சம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறும். இந்த கோவில் குடமுழுக்கு விழா கடந்த 2005-ம் ஆண்டு நடந்தது.

அப்போது இந்த கோவில் கொடிமரம் பழுதடைந்தது. இதனால் புதிய கொடி மரம் அமைக்க பக்தர் ஒருவர் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தேக்கு மரம் வாங்கி கொடுத்துள்ளார்.

பக்தர் வாங்கி கொடுத்த தேக்கு மரம்

தேக்கு மரம் வாங்கி கொடுத்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கொடி மரம் அமைக்கவில்லை. கோவில் உள்பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த மரம் மழை, வெயிலில் கிடந்தது வீணாகும் நிலையில் உள்ளது.

அறநிலையத்துறையின் அனுமதி பெற்று கொடிமரம் அமைக்க வேண்டும் என்ற காரணத்தால் 4 ஆண்டுகளாக அந்த மரம் அப்படியே கிடக்கிறது. கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகிறது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அனுமதி வழங்க வேண்டும்

மேலும் முன்பு கோவிலில் இருந்த சிறிய கொடி மரமும் தற்போது பெய்த மழையின் காரணமாக முறிந்து விழுந்து விட்டது. இதனால் ஆண்டு பெருவிழாவிற்கு புதிதாக சிறிய அளவில் தைல மரத்தில் கொடிமரம் நட்டு அதில் கொடியேற்றம் நடந்தது.

பக்தர் காணிக்கையாக அளித்த மரத்தில் கொடிமரம் அமைக்க அறநிலையத்துறையின் காலதாமதத்தால் கொடி மரம் அமைக்க முடியாமல் உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே இனிமேலும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story