செல்போன் கோபுரம் மீது ஏறி பட்டாசு வெடித்த வாலிபர்
திண்டுக்கல்லில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி பட்டாசு வெடித்ததுடன், தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாசு வெடித்த வாலிபர்
திண்டுக்கல் நாகல்நகரில் சிறுமலை செட் பகுதியில் நேற்று மாலையில் கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் அப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைந்துள்ள இடத்துக்கு சென்ற அந்த வாலிபர், தான் வைத்திருந்த பையை கீழே வைத்தார். பின்னர் அதில் இருந்த 2 தேசியக்கொடிகள், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், பட்டாசுகள் மற்றும் கோரிக்கை எழுதப்பட்ட மனு ஆகியவற்றை வெளியே எடுத்தார்.
பின்னர் கோரிக்கை மனுவை செல்போன் கோபுரத்தின் அருகில் வைத்துவிட்டு கொடிகள், பட்டாசுகளுடன் செல்போன் கோபுரத்தில் ஏற தொடங்கினார். இதற்குள் அப்பகுதியில் இருள் சூழ்ந்ததால் செல்போன் கோபுரத்தின் மேல் வாலிபர் ஏறுவதை யாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அந்த வாலிபர் தேசிய கொடிகள், அரசியல் கட்சி கொடிகளை அப்பகுதியில் கட்டி வைத்துவிட்டு பட்டாசுகளை அங்கிருந்தபடியே வெடிக்க தொடங்கினார்.
தற்கொலை மிரட்டல்
செல்போன் கோபுரத்தின் அருகில் பட்டாசு சத்தம் கேட்பதுடன், மேல் பகுதியில் இருந்து தீப்பொறியும் கீழே விழுவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், செல்போன் கோபுரத்தை உச்சியை பார்த்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் ஏறி நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் கீழே இருந்து சத்தம் போட்டனர். ஆனால் அந்த வாலிபர் அதை கேட்காமல் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் தெற்கு போலீசார், தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜூ தலைமையில் தீயணைப்பு படைவீரர்களும் அப்பகுதிக்கு வந்தனர். பின்னர் செல்போன் கோபுரத்தின் உச்சியில் நிற்கும் வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுல கிருஷ்ணன், தற்கொலை மிரட்டல் விடுக்கும் வாலிபரின் செல்போன் எண்ணை பெற்று அவரை தொடர்புகொண்டு பேசினார்.
போலீசார் சமரசம்
அப்போது அந்த வாலிபர், சிறுமலையை அடுத்த தென்மலையை சேர்ந்த மூக்கையா (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் நிலப்பிரச்சினை, கடன் பிரச்சினையால் மனமுடைந்து செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதாகவும், தனது கோரிக்கை மனுவை செல்போன் கோபுரத்தின் அருகில் வைத்துள்ளதாகவும் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்திய போலீஸ் துணை சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதில் சமரசமான மூக்கையா செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய உறவினர்களை வரவழைத்த போலீசார், மூக்கையாவிடம் இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.