காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சாவு
நாகர்கோவிலில் நள்ளிரவில் கொடூர காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நள்ளிரவில் கொடூர காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காயங்களுடன் வாலிபர்
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று இரவு 10 மணிக்கு வாலிபர் ஒருவர் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் ரத்தக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டார்.
இவரை மற்றொரு வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்திருந்தார். இதை தொடர்ந்து காயம் அடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் இறந்து விட்டார்.
கொலையா?
இவரை ஆசாமிகள் ஆயுதங்களால் தாக்கியதில் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது படுகாயங்களுடன் இறந்தவர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது 22) என்பது தெரியவந்தது.
அதே சமயத்தில் மனோஜிக்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் கும்பல் தாக்கியதில் அவர் இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்தது.
இந்த சம்பவம் நாகர்கோவிலில் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.