மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் சாவு
ஜோலார்பேட்டை அருகே மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாதுஷா. அவரது மகன் ஷாதிக்பாஷா (வயது 33). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் மனைவி முபினா மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து அவரது உறவினர் வந்துள்ளார். தொடர்ந்து உறவினருடன் இரவில் ஏலகிரி கிராமம் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு செல்ல உறவினர் வாகனத்தை எடுத்த போது ஷாதிக்பாஷா சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வராததால் உறவினர் அங்கு சென்று பார்த்த போது, அவர் இல்லாததால் வீட்டிற்கு சென்று இருப்பார் என்று நினைத்து வீட்டிற்கு சென்றார். அங்கு சென்று பார்த்த போது ஷாதிக்பாஷா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் ஷாதிக்பாஷாவின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடிப் பார்த்த போது அவரது காலணி அங்கேயே இருந்தது. இரவு நேரம் என்பதால் அவர்கள் அங்கிருந்து வந்துவிட்டனர். நேற்று காலையில் மதகு அருகே ஏரியில் ஷாதிக்பாஷா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசாரும், நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரில் மிதந்து இருந்த ஷாதிக்பாஷாவின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் காதர்கான் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.