பெண் தவறவிட்ட பணப்பையை போலீசிடம் ஒப்படைத்த வாலிபர்
கோத்தகிரியில் பெண் தவறவிட்ட பணப்பையை போலீசிடம் வாலிபர் ஒப்படைத்தார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள அரக்கம்பையை சேர்ந்த ரஞ்சித் என்ற வாலிபர் நேற்று முன்தினம் மாலை காமராஜர் சதுக்கம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பை கீழே கிடந்தது. அதனை எடுத்து பார்த்தபோது அதில் பணம் மட்டும் இருந்தது. வேறு ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த பையை ரஞ்சித், கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதற்கிடையில், அனையட்டி கிராமத்தைச் சேர்ந்த ஷெர்லி என்ற பெண் அழுது கொண்டே கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தொடர்ந்து போலீசாரிடம், ரூ.10 ஆயிரத்துடன் பையை தவறவிட்டதாகவும், அதனை கண்டுபிடித்துக்கொடுக்கும் படியும் புகார் அளித்தார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஷெர்லி தவறவிட்ட பையை தான் ரஞ்சித் என்ற வாலிபர் மீட்டு போலீசில் ஒப்படைத்தது தெரியவந்தது. இதையடுத்து கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான்கான் மற்றும் வாலிபர் ரஞ்சித் ஆகியோர் ஷெர்லியிடம் பணப்பையை செர்லியிடம் வழங்கினர். கீழே கிடந்த பணப்பையை போலீசில் ஒப்படைத்த வாலிபரின் நேர்மையான செயலை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.