பணம் கொடுக்க மறுத்ததால் கள்ளக்காதலியின் ஆபாச படத்தை முகநூலில் வெளியிட்ட வாலிபர் போலீசார் விசாரணை
பணம் கொடுக்க மறுத்ததால் கள்ளக்காதலியின் ஆபாச படத்தை முகநூலில் வெளியிட்ட வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த இறைஞ்சி பகுதியை சேர்ந்தவர் முனியன் மகன் சிரஞ்சீவி (வயது 35). இவருக்கும் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடியை சேர்ந்த கணவரை இழந்து தனியாக வசித்து வரும் 30 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி, அந்த பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகும் அவர், அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால், உன்னுடைய ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த பெண், பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, தனது கள்ளக்காதலியின் ஆபாச புகைப்படத்தை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்டார்.
இதற்கிடையே முகநூலில் வந்த ஆபாச புகைப்படத்தை காண்பித்து, சிரஞ்சீவியின் தந்தை முனியன், தாய் அங்கம்மாள், மனைவி ரஞ்சிதகுமாரி மற்றும் இறைஞ்சியை சேர்ந்த காசியம்மாள், மணிகண்டன் ஆகியோர் அந்த பெண்ணிடம் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிரஞ்சீவி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.