வீட்டை உறவினர்கள் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீர் தா்ணா


வீட்டை உறவினர்கள் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீர் தா்ணா
x

வீட்டை உறவினர்கள் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீர் தா்ணா போராட்டம் நடத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அப்போது மனு அளிக்க வந்த வாலிபர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது மழை பெய்தது. ஆனாலும் அவர் தரையில் அமர்ந்து கோஷமிட்டார். உடனே கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தர்ணாவில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த வாலிபர் கூறியதாவது:-

என்னுடைய பெயர் ரமேஷ் (வயது 31). ஊர் கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றியாகும். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனக்கு சகோதரர்கள் உண்டு. நான் பிறந்ததில் இருந்து எங்களது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் எனது உறவினர்கள் சிலர் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இதனால் கடந்த 2 நாட்களாக வீடு இன்றி பொது இடங்களில் தங்கி வருகிறேன். மேலும் எனது வீட்டை முழுமையாக அபகரிக்க முயல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை எனக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து ரமேஷிடம், "கலெக்டர் அலுவலகத்தில் வந்து இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. முறைப்படி புகாரை மனுவாக கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்" என்று போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ரமேஷ், தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வாலிபர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story