பாறையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
கன்னியாகுமரி கடலில் பாறையில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பதற்காக காலை முதலே லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதையொட்டி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தின் கடலின் நடுவே அமைந்துள்ள மரண பாறையில் ஒரு வாலிபர் ஏறி நின்று கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை கரைக்கு வருமாறு அழைத்தனர். அவர் அதை ஏற்கவில்லை. இதனைத்தொடர்ந்து போலீசார் கடலில் நீந்தி சென்று அந்த வாலிபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர் மயிலாடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் என்பதும், முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்ய வந்த நிலையில் மது போதையில் பாறை மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.