காதலித்த பெண்ணை சந்திக்க சுவர் ஏறி குதித்தபோது போலீசில் சிக்கிய வாலிபர்


காதலித்த பெண்ணை சந்திக்க சுவர் ஏறி குதித்தபோது போலீசில் சிக்கிய வாலிபர்
x
தினத்தந்தி 10 Aug 2022 5:54 PM GMT (Updated: 10 Aug 2022 9:02 PM GMT)

காதலித்த பெண்ணை சந்திக்க சுவர் ஏறி குதித்தபோது வாலிபர் போலீசில் சிக்கினார்.

திருவண்ணாமலை

ஆரணி,

வேலைபார்த்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றதால் மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற நேரத்தில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இதனால் திரும்பிய வாலிபர் கள்ளத்தனமாக அவரை சந்திப்பதற்கு சுவர் ஏறி குதித்தபோது போலீசில் சிக்கினார்.

ஆரணி அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

சுவர் ஏறி குதித்தார்

ஆரணியிலிருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கிராமத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இரவில் நாடகமும், கலை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றமும், சொற்பொழிவும் நடந்து வந்தன. இதனால் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஆரணி - போளூர் நெடுஞ்சாலையில் சாலை ஓரம் ஒரு மோட்டார் சைக்கிள் நீண்டநேரமாக நிறுத்தப்பட்டிருந்தது. ரோந்து சென்ற போலீசார் திரும்பி வரும்போது ஒரு வீட்டின் சுவரில் ஏறி இருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் வெளியே குதித்தார்.

உடனடியாக போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரித்ததில் அவர் போளூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பெண் ஆரணி பகுதியில் திருமணம் செய்து கொடுத்ததாகவும் அந்த பெண்ணை தேடி வந்ததாக கூறினார்.

வேறு ஒருவருடன் திருமணம்

விசாரணையில் அந்த பெண்ணை அவர் காதலித்து வந்ததாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் நல்ல வேலையில் இருக்க வேண்டும் என கூறியதால் நான் மலேசியா சென்று அங்கு வேலை செய்தேன். அப்போது நான் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது.இதை கேள்விப்பட்டதும் விடுமுறை எடுத்துக் கொண்டு மலேசியாவில் இருந்து இங்கு வந்தேன். அவர் இருக்கும் விலாசத்தை கண்டுபிடித்து பேசலாம். அவருடன் ஓடி விடலாம் என நினைத்து தான் வந்தேன். சுவர் ஏறி குதித்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்'' என பரிதாபத்துடன் கூறினார்.

உடனடியாக போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி இனி இது போன்று நடந்து கொள்ள மாட்டேன் என எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பினர்.


Next Story