சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்


சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்
x

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என்பது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

காயங்களுடன் வாலிபர் பிணம்

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று காலை 6 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வந்தனர். பக்கவாட்டு படிக்கட்டு வழியாக வந்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்து பற்கள் உடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கோவில் அர்ச்சகர்களிடம் பக்தர்கள் தெரிவித்தனர். அர்ச்சகர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த நபர் வெள்ளை நிறத்தில் கட்டம் போட்ட சட்டை, கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். அவரது பற்கள் உடைந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.

போலீஸ் விசாரணை

அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரிய வில்லை. வேலூர் மாவட்ட தடயவியல் துறை உதவி இயக்குனர் ஜேம்ஸ், ஓய்வு பெற்ற தடயவியல் துறை உதவி இயக்குனர் பாரி உள்ளிட்டோர் தலைமையில் அதிகாரிகள் வந்து உடைந்த பற்கள், தலைமுடி மற்றும் ரத்த மாதிரிகள் உள்ளிட்டவைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு கிடந்த அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மர்ம சாவு என போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story