வாலிபர் வெட்டிக்கொலை


வாலிபர் வெட்டிக்கொலை
x

வாலிபர் வெட்டிக்கொலை

தஞ்சாவூர்

தஞ்சை அருகே வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பல்வேறு வழக்குகள்

தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சாமிநாதன்(வயது 36). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்து வந்தது. மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக இவர் சிறைக்கு சென்றுள்ளார்.

வெளியூரில் தங்கி இருந்த சாமிநாதன், தீபாவளி பண்டிகைக்காக தஞ்சைக்கு வந்தார். இதனை அறிந்த மர்ம கும்பல் அவரை நோட்டமிட்டுள்ளனர்.

கொடூரமாக வெட்டிக்கொலை

நேற்று இரவு 11.15 மணி அளவில் வடக்கு வாசல் பகுதியில் இருந்து அவர் பிருந்தாவனம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்குப்பழியாக...

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கொலை செய்யப்பட்ட சாமிநாதன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பழிக்கு பழியாக சாமிநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும் இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதுடன், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story