போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு சென்ற வாலிபர்
மார்த்தாண்டம் அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாட்டுக்கு சென்ற வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாட்டுக்கு சென்ற வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
போலி பாஸ்போர்ட்
மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஞானமுத்து மகன் ராஜேஷ் சர்மா (வயது 27). இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணி மகன் ஜாண்ரோஸ். அதே பகுதியை சேர்ந்தவர் நேசமணி மகன் மனோகரன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்தநிலையில் ராஜேஷ்சர்மா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஜாண்ரோஸ் தனது பெயரை நேசமணி மகன் மனோகரன் என மாற்றி ஆள்மாறாட்டம் செய்து போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக கூறியிருந்தார். இந்த புகாரின் மீது விசாரணை நடத்த சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மார்த்தாண்டம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
போலீஸ் விசாரணை
அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ஜாண்ரோஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மனோகரன் இறப்பதற்கு முன்பே ஜாண்ரோஸ், மனோகரனின் பேரில் பாஸ்போர்ட் எடுத்து உள்ளதும், 2016-ம் ஆண்டுக்கு முன்பே வெளிநாட்டுக்கு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.