பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் சிக்கினார்
கம்பம் அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள கரிசல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 39) என்பவர் கண்டக்டராக இருந்தார். அந்த பஸ் கூடலூர் பஸ்நிலையம் வந்தது. அப்போது வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார். இதனை பஸ் கண்டக்டர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கண்டக்டரை அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது. சக பயணிகள் அந்த வாலிபரை பிடித்து கம்பம் வடக்கு போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், கூடலூர் சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்த வசந்த் (25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் வழக்குப்பதிவு செய்து வசந்த்தை கைது செய்தார்.