மாணவியை கடத்திய வாலிபர் தற்கொலை


மாணவியை கடத்திய வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் கூறினார்.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சூர்யா(வயது 20). இவரும், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுடைய மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி காலையில் பள்ளிக்கு சென்ற மாணவியை சூர்யா கடத்தி, ஒட்டம்பட்டு கருமாங்குன்றுக்கு கொண்டு சென்றார். அதன்பிறகு மாணவி வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

வாலிபர் தற்கொலை

இது குறித்து மாணவியின் தந்தை, நேற்று முன்தினம் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மகளை சூர்யா கடத்திச் சென்று விட்டதாகவும், மீட்டுத்தருமாறும் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக முருகனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது பற்றி அறிந்த சூர்யா, மனமுடைந்தார். பின்னர் அவர், அந்த மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒட்டம்பட்டு ஏரி கருமாங்குன்றில் உள்ள ஒரு மரத்தில் நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் முருகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேரில் சென்று சூர்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். அனந்தபுரம் போலீசார் விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் முருகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சூர்யா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வெயிட்டிங் பார் டெத் என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story