மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது


மாணவியை கடத்தி சென்ற வாலிபர் கைது
x

நாகர்கோவில் அருகே ஜெபம் செய்வது போல் நடித்து 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று வெளிமாநிலத்தில் குடும்பம் நடத்திய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே ஜெபம் செய்வது போல் நடித்து 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று வெளிமாநிலத்தில் குடும்பம் நடத்திய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஜெபம் செய்வது போல்...

தென்தாமரைகுளம் அருகே உள்ள பொற்றையடி கரம்பவிளையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் செந்தில்குமாருக்கு பூதப்பாண்டி பகுதியில் வசிக்கும் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தொழிலாளி வீட்டுக்கு செந்தில்குமார் அவ்வப்போது சென்று வந்தார். தொழிலாளிக்கு 2 மகள்கள் உண்டு.

இதில் 2-வது மகளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதை பார்த்த செந்தில்குமார், ஜெபம் செய்தால் உடல்நிலை சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். பின்னர் இதையே சாக்காக வைத்து தொழிலாளியின் வீட்டுக்கு செந்தில்குமார் தினமும் செல்ல தொடங்கினார். மேலும் வீட்டில் ஜெபம் செய்வது போல நடித்து தொழிலாளியின் குடும்பத்தில் அனைவரிடமும் நெருங்கி பழகி இருக்கிறார்.

மாணவி கடத்தல்

முக்கியமாக தொழிலாளியின் மூத்த மகளான 10-ம் வகுப்பு மாணவியிடம் நெருங்கி பழகியதாக தெரிகிறது. அப்போது அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறினார்.வீட்டுக்கு அடிக்கடி வந்து குடும்ப உறுப்பினர் போல் பழகியதால் தொழிலாளியும், அவருடைய மனைவியும் இதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் செந்தில்குமார், மாணவியிடம் நைசாக பேசி கடத்திச் சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளி இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்து மாணவியையும், அவரை கடத்தி சென்ற செந்தில்குமாரையும் தேடி வந்தனர்.

மீட்பு-கைது

இந்த நிலையில் செந்தில்குமார், மாணவியுடன் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் பதுங்கி இருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செந்தில்குமாரின் மனைவி உதவியுடன் அவரை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவருடைய மனைவி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு செந்தில்குமாரிடம் பேசினார். அப்போது உடனே ஊருக்கு வருமாறு அழைத்தார்.

இதை நம்பிய செந்தில்குமார், மாணவியுடன் திருவனந்தபுரம் வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அங்கு விரைந்து சென்று செந்தில்குமாரை கைது செய்தனர். அவருடன் இருந்த மாணவியையும் மீட்டனர். இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கடத்திய மாணவியை செந்தில்குமார் வெளிமாநிலத்துக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தியதும், மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து கடத்தல் வழக்கானது போக்சோ வழக்காக மாற்றப்பட்டது. கைதான செந்தில்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story