பள்ளி மாணவியை கொன்ற வாலிபர் போலீசில் சரண்


பள்ளி மாணவியை கொன்ற வாலிபர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே காரில் கடத்தி சென்று பள்ளி மாணவியை கொன்ற வாலிபர் பைக்காரா போலீசில் சரண் அடைந்தார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது அம்பலமானது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே காரில் கடத்தி சென்று பள்ளி மாணவியை கொன்ற வாலிபர் பைக்காரா போலீசில் சரண் அடைந்தார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது அம்பலமானது.

பள்ளி மாணவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பைக்காரா பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24-ந் தேதி வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். ஆனால், மாலையில் வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் அங்கர்கோட் பகுதியில் புதர் மறைவில் ஒரு சிறுமி பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் பைக்காரா போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காணாமல் போன மாணவியின் பெற்றோர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இறந்து கிடப்பது தங்களது மகள் தான் என அடையாளம் காட்டினர்.

தனிப்படை அமைப்பு

மாணவி உடலில் அணிந்திருந்த துணிகள் அலங்கோலமாக கிடந்தது. மர்ம நபர் காரில் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பகுதி மக்கள் காரில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படி சென்றதாகவும், அதுகுறித்து கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை. இதனால் தாங்கள் தாக்க முயன்ற போது, அவர் காரில் இருந்து தப்பியோடியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் மாணவியை கடத்தி சென்ற கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பைக்காரா போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில் பைக்காரா அருகே கக்கோடி மந்து பகுதியை சேர்ந்த ராஜினேஷ் (வயது 25) என்பவரது கார் என்பதும், அவர் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசிலா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

போலீசில் சரண்

இதற்கிடையில் போலீஸ் விசாரணை தீவிரமடைந்து இருப்பதையும், தன்னை தேடுவதையும் ராஜினேஷ் தெரிந்துகொண்டார். தொடர்ந்து நேற்று கிராம நிர்வாக அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலையில் பைக்காரா போலீஸ் நிலையத்தில் ராஜினேஷ் சரணடைந்தார். இதை அறிந்த கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். தொடர்ந்து சரணடைந்த ராஜினேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் பள்ளிக்கூடம் சென்று விட்டு வீடு திரும்புவதற்காக காத்திருந்த மாணவியை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி காரில் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து இரும்பு கம்பியால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்ததை ராஜினேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது போக்சோ மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆசைக்கு இணங்குமாறு...

பள்ளி மாணவியை கடத்தி கொலை செய்தது குறித்து ராஜினேஷ் போலீஸ் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:-

நான் சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்தில் பயணிகளுக்கு நுழைவு கட்டணம் வழங்கும் பணியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறேன். மாணவியின் குடும்பத்தினர் எனக்கு உறவினர். கடந்த 24-ந் தேதி ஊட்டியில் மது அருந்தி விட்டு, எனது காரில் வீட்டுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளிக்கூடம் முடிந்து மாணவி சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

இதனால் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி காரில் வருமாறு அழைத்தேன். உறவினர் என்பதால் மாணவியும் என்னுடன் காரில் வந்தார். அப்போது எனது ஆசையை வெளிப்படுத்தினேன். அதற்கு மாணவி உடன்படவில்லை. இதனால் காரை வேகமாக ஓட்டி அங்கர்கோட் பகுதிக்கு மாணவியை கடத்தி சென்றேன். அங்கு ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். அப்போது சத்தம் போட்டார்.

இரும்பு கம்பியால் அடித்தேன்

இதனால் ஆத்திரமடைந்த நான் காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தலையில் ஓங்கி அடித்தேன். இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால் பயந்து போன நான், மாணவி உயிருடன் இருந்தால் நடந்தது குறித்து வெளியில் சொல்லி விடுவார் என நினைத்து பயத்தில் கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் காரில் அங்கிருந்து செல்லும் போது, சிலர் என்னிடம் விசாரித்தனர்.

அப்போது ஊட்டியில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துவிட்டு செல்வதாக கூறினேன். ஆனால், அவர்கள் நம்பவில்லை. இதனால் என்னை தாக்க தொடங்கினர். இதனால் காரை விட்டு இறங்கி தப்பி ஓடினேன். தலைமறைவாக இருந்த நிலையில், போலீசார் தேடுவதை அறிந்து சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story