விதவையுடன் வாழ்ந்த வாலிபர் மர்ம சாவு
மதுரையில் விதவையுடன் வாழ்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 35). வெல்டிங் தொழிலாளி. இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்துள்ளார். குழந்தைகளும் உள்ளனர்.
இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக இவர், மதுரை ஒத்தக்கடை பாரதி நகரில், விதவை பெண் ஒருவருடன் வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டில் அன்பழகன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், அன்பழகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த விதவை பெண் தலைமறைவாகிவிட்டார்.
இந்தநிலையில், அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. அதில், அன்பழகன் தூக்குப்போட்டது, விஷம் குடித்தது போன்ற எந்த அறிகுறிகளும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அன்பழகன் இறந்த தகவல் கேட்டு, அவருடைய முதல் மனைவி என கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் உறவினர்களுடன் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர், தன்னுடைய கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து விட்டார்.
இதனை தொடர்ந்து, ஒத்தக்கடை போலீசார் இதுகுறித்து சந்தேக மரணம் என்ற பெயரில் முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், அன்பழகனின் மரணம் தொடர்பாக டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது உடல் உள் உறுப்புகளை பரிசோதனைக்கு அனுப்பி,. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அன்பழகனை மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டு தலைமறைவான பெண்ணையும் தேடி வருகிறோம். இது கொலையா, அல்லது தற்கொலையா என்பது குறித்த முழுவிவரம் விரைவில் தெரியவரும்" என்றனர்.