விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விகாஷ் (வயது 20). இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருபாநிதியும் (20) கடந்த 7-ந் தேதி ஆலங்குடி வழியாக அறந்தாங்கி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலங்குடி அருகே உள்ள தெற்கு பார்த்தம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (19), அதே பகுதியை சேர்ந்த சரவணன் (27) ஆகியோர் அறந்தாங்கி சாலையில் இருந்து தெற்கு பாத்தம்பட்டியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அண்ணா நகர் பாலம் அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 4 பேரையும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.