வாலிபர் உடல் 55 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது


வாலிபர் உடல் 55 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது
x

புரூணை நாட்டில் உயிரிழந்த வாலிபர் உடல் 55 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

புதுக்கோட்டை

வெளிநாட்டு வேலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மைனாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). இவரது மனைவி ராஜலெட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுரேஷ் கடந்த ஆண்டு புரூணை நாட்டிற்கு கட்டுமான நிறுவனத்திற்கு தொழிலாளியாக உறவினர்களிடம் கடன் வாங்கி வேலைக்கு சென்றார். சில மாதங்களிலேயே திடீரென காய்ச்சல் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் காய்ச்சல் குணமாகாமல் கோமா நிலைக்கு போய்விட்டதாக மருத்துவமனையில் இருந்து தகவல் கூறியுள்ளனர்.

மேலும் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் தனது கணவரை இந்தியாவிற்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராஜலெட்சுமி, மத்திய, மாநில அரசுகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். ஆனால் சிகிச்சையில் இருப்பவரை இந்தியா அழைத்து வர முடியாத நிலையில் உள்ளார் என தகவல் கொடுத்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த நிலையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் 25-ந் தேதி சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக ராஜலெட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளனர். தன் கணவர் தங்களை விட்டு பிரிந்துவிட்டார் என்ற தகவல் கேட்டு கதறி அழுத ராஜலெட்சுமி, தனது கணவரை உயிருடன் தான் அழைத்து வர முடியவில்லை. தற்போது உயிரிழந்த நிலையிலாவது தனது கணவர் உடலை மீட்டு தாருங்கள் என்று மாவட்ட கலெக்டர் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, ராஜலெட்சுமியின் மனுவை சென்னை வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆணையர் அலுவலகத்திற்கும், பொதுத்துறை செயலாளருக்கும் அனுப்பி இருந்தார். ஆனால் சிகிச்சைக்கான செலவு ரூ.24 லட்சத்தை கட்ட வேண்டும் என்ற பதிலே கிடைத்தது.

சொந்த ஊரில் தகனம்

இந்த நிலையில் தான் புரூணை வாழ் தமிழ் சமுதாயம், இந்தியன் அசோசியேசன் இணைந்து கரம் கோர்த்து அங்குள்ளவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வசூலித்த பணம் மற்றும் எம்பசி மூலம் கிடைத்த தொகையோடு, நிறுவன முதலாளி ஜாபரின் பங்கு தொகையை வசூலித்து பாதி தொகையை கட்டி மீதி தொகையை முதலாளி ஜாபர் கட்டுவதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து 55 நாட்களுக்கு பிறகு சுரேஷின் உடலை பெற்று இந்தியா அனுப்பியுள்ளனர். இந்நிலையில், உடல் நேற்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு சுரேஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு காத்திருந்த உறவினர்கள் சுரேஷ் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


Next Story