கோவில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது


கோவில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பலத்த மழையால் கோவில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் பலத்த மழையால் கோவில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

தடுப்புச்சுவர் இடிந்தது

கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து பலத்த மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதேபோல் மசினகுடி அருகே கல்லட்டி மலைப்பாதையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்தநிலையில் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சின்ன சூண்டி மாரியம்மன் கோவிலையொட்டி இருந்த தடுப்புச்சுவர் பலத்த மழைக்கு இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த கூடாரமும் சரிந்து விழுந்தது.

மண் சரிவு

மேலும் சூண்டியில் இருந்து காந்திநகர் செல்லும் சாலையோரம் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வருவாய் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து மண் குவியல்களை அகற்றினர். இதனால் போக்குவரத்து சீரானது. இதேபோல் கேரள மாநில பகுதியில் கனமழை பெய்து வருவதால், அதன் தாக்கம் கூடலூர் பகுதியில் அதிகமாக உள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கனமழையால் பச்சை தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தற்போது மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் விளைச்சல் இன்னும் பாதிக்கும் என்றனர்.


Next Story