10 ரூபாய் நாணயத்திற்கு வந்த சோதனை
இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவை ஆகும். இதனை செல்லாது என கூறி எந்தவொரு நபராலும் வாங்க மறுக்கவோ, செல்லாது என கொடுக்காமலோ இருக்கவும் முடியாது.
10 ரூபாய் நாணயம்
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கும் உரிமை இந்திய ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே உள்ளது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம் தற்போது படும் பாட்டை பற்றி சொல்லிமாளாது. ஒரு இடத்தில் அந்த நாணயத்தை கொடுத்தால் பொதுமக்கள் வாங்கி கொள்கிறார்கள். அதேநேரத்தில் மற்றொரு இடத்தில் கடைகளிலோ அல்லது வேறு இடங்களிலோ கொடுத்தால் 10 ரூபாய் நாணயத்தை சிலர் வாங்க மறுக்கின்றனர்.
இந்த நிலைமை தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் நிலவி வருகிறது. வங்கிகள் என்ன தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் 10 ரூபாய் நாணயத்தை கண்டாலே அதனை தவிர்த்து கொஞ்சம் ரூபாய் நோட்டாக இருந்தால் கொடுங்களேன் என்று கெஞ்சி கேட்கக்கூடிய நிலைமை உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
வாடிக்கையாளர்கள் வாங்க மறுப்பு
புதுக்கோட்டையில் டீக்கடை நடத்தும் கலையரசன்:- ''எனது டீக்கடையில் டீக்குடிக்க வருபவர்கள் சிலர் 10 ரூபாய் நாணயங்களை கொடுப்பார்கள். ஆனால் அதனை வாங்கி கொள்வேன். அதே நாணயத்தை வாடிக்கையாளர்களிடம் சில்லறையாக திருப்பி கொடுக்கும் போது சிலர் வாங்க மறுக்கின்றனர். என்னிடம் குறிப்பிட்ட அளவு 10 ரூபாய் நாணயங்கள் உள்ளன. இதனை நான் வங்கிக்கு சென்று மாற்ற வேண்டி உள்ளது. அதற்கான நேரம் இல்லாததால் அந்த நாணயங்களை அப்படியே வைத்துள்ளேன்''.
நாணயங்களை வாங்க உத்தரவு
கீரனூரை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பூபதிராஜ்:-
மக்களின் வணிக பயன்பாட்டுக்காக 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் பதிலாக ரிசர்வ் வங்கி நாணயங்களாக வெளியிட்டுள்ளன. 10 ரூபாய் நாணயங்கள் ஏற்க னவே புழக்கத்தில் இருக்கிறது. இதனை வாங்குவதற்கு பலர் மறுக்கின்றனர். குறிப்பாக பஸ்களில் கண்டக்டர்கள் வாங்க மறுப்பதால் ஒட்டுமொத்தமாக அது புழக்கத்தில் இல்லாமல் உள்ளது எனக்கூறப்பட்டது. தற்போது அனைத்து பஸ் டெப்போக்களிலும் பயணிகளிடமிருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்கிறோம். நாள்தோறும் ரூ.200-க்கு 10 ரூபாய் நாணயம் வருகிறது. அதனை டெப்போவில் செலுத்துகிறோம். ஆனால் நாங்கள் தரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க பொதுமக்கள் சிலர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
வங்கிகள் அறிவுறுத்தல்
புதுக்கோட்டையை சேர்ந்த சிறு வியாபாரி சவுந்தர்:- '' 10 ரூபாய் நாணய பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும். வாடிக்கையாளர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை கண்டிப்பாக வாங்கி கொள்ள வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்துகின்றன. ஆனால் அதேநேரத்தில் இந்த நாணயங்களை வங்கிகள் அல்லது அரசு அலுவலகங்களுக்கு கொண்டு சென்றால் அதனை வாங்குவதில் பெரும் சிரமப்படுகின்றனர். இவ்வளவு நாணயங்களை ஏன் மொத்தமாக கொண்டு வருகிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.
எங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நான் 10 ரூபாய் நாணயங்களை வாங்கி கொள்வேன். அதேநேரத்தில் ஒரு சிலரிடம் அந்த நாணயத்தை சில்லறையாகவும் கொடுப்பேன். சிலர் அதனை வாங்க மறுப்பார்கள். அதனால் அவர்களுக்கு ரூபாய் நோட்டினை வழங்குவேன்''.
கோவிலில் காணிக்கை...
அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன்:- அறந்தாங்கியில் குறிப்பிட்ட சில வணிக நிறுவனங்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி கொள்கின்றனர். சிலர் அதனை வாங்க மறுத்து வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் 10 ரூபாய் நாணயம் குறித்த குழப்பம் இன்னும் பொதுமக்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் உள்ளது. என்னிடம் இருந்த 10 ரூபாய் நாணயத்தை யாரும் வாங்காததால் அதனை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டேன்.
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
பொன்னமராவதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பெருமாள்:- பஸ்சில் பயணிக்கும் பயணிகள் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் அதனை பெற்றுக்கொண்டு பயணச்சீட்டு கொடுத்து வருகிறேன். ஆனால் பயணிகளுக்கு சில்லறை கொடுக்கும் பொழுது 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் பயணிகள் வாங்க மறுக்கிறார்கள். ஒரு சில படித்த இளைஞர்கள் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்கிறார்கள். 10 ரூபாய் நாணயங்களை அனைவரும் அச்சமின்றி வாங்க மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நடவடிக்கை...
புதுக்கோட்டை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த்:- ''10 ரூபாய் நாணயத்தை வங்கிகளில் யாரும் வாங்க மாட்டோம் என கூற முடியாது. அவ்வாறு எந்த வங்கியிலாவது கூறினால் புகாராக தெரிவிக்கலாம். அந்த வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்கள் 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் வாங்கி கொள்ள வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. பொதுமக்களும் 10 ரூபாய் நாணயங்களை வாங்கி கொள்ளலாம். இதில் எந்தவித அச்சமும் தேவையில்லை'' என்றார்.