புகைமண்டலமாக காட்சி அளித்த தஞ்சை-புதுக்கோட்டை சாலை


புகைமண்டலமாக காட்சி அளித்த தஞ்சை-புதுக்கோட்டை சாலை
x

புகைமண்டலமாக காட்சி அளித்த தஞ்சை-புதுக்கோட்டை சாலை

தஞ்சாவூர்

தஞ்சை-புதுக்கோட்டை சாலையின் ஓரங்களில் அடிக்கடி குப்பைகள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகை மூட்டத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

தஞ்சை ஆர்.ஆர். நகரில் இருந்து மேலவஸ்தாசாவடி வரை செல்லும் சாலை புதுக்கோட்டை செல்லும் சாலையாகும். இந்த வழித்தடத்தில் தினமும் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் இந்த சாலை வழியாக ஏராளமானோர் நடைபயணமும் மேற்கொண்டு வருகி்ன்றனர்.

இந்த சாலையில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், வீடுகள் ஏராளமாக உள்ளன. மேலவஸ்தாசாவடி டவுண்டானா அருகே லூர்து மற்றும் சஞ்சய் நகரில் செல்லும் சாலையோரத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் குவிந்து கிடக்கிறது.

தீ வைத்து கொளுத்தும் அவலம்

இவ்வாறு குவிந்து காணப்படும் குப்பைகள் காற்று வீசும் நேரத்தில் பறந்து செல்கிறது.இதனால் சாலைகளிலும், வாகனங்களில் செல்வோர் மீதும் குப்பைகள் வந்து விழுகிறது. இதனால் ஒரு சிலர் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அவ்வப்போது தீயிட்டு கொளுத்துகின்றனர்.

இதனால் அந்த சாலையில் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. அடிக்கடி இது போன்று அருகருகே குப்பைகளை குவித்து வைத்து கொளுபத்துவதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

வாகன ஒட்டிகள் அவதி

இந்த நிலையில் நேற்று இந்த இடத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. சாலையே தெரியாத அளவிற்கு புகை காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் மெதுவாக சென்றனர். சிலர் கண் எரிச்சல், மூச்சு திணறல் காரணமாக இறங்கி நின்று விட்டு புகை கலைந்த பின்னர் செல்கி்ன்றனர்.

புகை மூட்டம் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் குப்பைகளை ஆங்காங்கே கொட்டும் வகையில் குப்பைத்தொட்டிகள் வைப்பதோடு, அவற்றை அவ்வப்போது அகற்றி சுகாதாரமாக இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.


Related Tags :
Next Story