பெண் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
வாழப்பாடி:-
வாழப்பாடி அருகே பெண் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது.
பூட்டு உடைப்பு
வாழப்பாடி அருகே உள்ள சேசஞ்சாவடி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி செல்லம்மாள் (வயது 65). ராமச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செல்லம்மாள் ஆடுகளை வளர்த்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார். வீட்டில் தனியே வசித்து வந்த செல்லம்மாள் நேற்று காலை பால் வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
பின்னர் ½ மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு மற்றும் தாழ்ப்பாள் ஆகியவை உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்றபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. இதுகுறித்து செல்லம்மாள் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பொதுமக்கள் அச்சம்
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் முகத்தை துணியால் மூடியபடி திருடியது தெரியவந்தது. மேலும் வீட்டுக்கு வரும்போது மர்மநபர்கள் நாய்களுக்கு பிஸ்கட் வழங்கியும், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க வாழப்பாடி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 7-க்கும் மேற்பட்ட வீடு மற்றும் கடைகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வாழப்பாடி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தனிப்படை அமைத்து மர்ம நபர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.