தனியாா் நிறுவன ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு


தனியாா் நிறுவன ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை திருட்டு
x

நாகர்கோவிலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 17 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 17 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

பூட்டிய வீட்டில் திருட்டு

நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திக் (வயது 34), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் மகேஷ் கார்த்திக் மட்டும் வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகளை காணவில்லை.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அவர் வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நாய் வெளியே சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் அடையாளம் காட்டவில்லை.

தனிப்படை அமைப்பு

இதற்கிடையே மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் 2 மர்ம நபர்கள் இரவில் மகேஷ் கார்த்திக் வீட்டிற்கு செல்வதும், கதவை உடைப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. அந்த நபர்களின் உருவம் அதில் தெளிவாக பதிவாகி உள்ளது. அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story