நெல்லிக்குப்பம் அருகே வாழைத்தார் திருடிய வாலிபருக்கு 11 மாதம் சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
நெல்லிக்குப்பம் அருகே வாழைத்தார் திருடிய வாலிபருக்கு 11 மாதம் சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் என்கிற பன்னீர் (வயது 47), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான அகரம் கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் கடந்த ஆண்டு வாழை சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 18.12.2021 அன்று அதிகாலை 4 மணி அளவில் சக்திவேல் தனது அண்ணன் முருகன் மற்றும் அகரம் பகுதியை சேர்ந்த கிரி ஆகியோருடன் வாழைத்தார் வெட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கு ஒருவர் வாழைத்தார்களை வெட்டி திருடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக்திவேல் உள்ளிட்ட 3 பேரும் அவரை பிடித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நடுவீரப்பட்டு அடுத்த கொட்டிகோணாங்குப்பத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராஜதுரை (34) என்பதும், வாழைத்தார்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக கடலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி வனஜா தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ராஜதுரைக்கு 11 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜராகி வாதாடினார்.