ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு


ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு
x

ஆம்பூரில் மளிகை வியாபாரி ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

மளிகை வியாபாரி

ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60). அதேப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கில் இருந்த ரூ.3 லட்சத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தை ஒரு பையில் வைத்து அதை தனது ஸ்கூட்டரின் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு அதேப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குள் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர் ஸ்கூட்டரில் ஆம்பூர் பஜாருக்கு சென்று அங்கு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.

ரூ.3 லட்சம் திருட்டு

வீட்டில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் பணத்தை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ பணத்தை திருடிச்சென்றுவிட்டனர். எந்த பகுதியில் நிறுத்தியபோது திருடிச் சென்றார்கள் என தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் சென்ற இடங்களான வங்கி, மருத்துவமனை, பஜார் வீதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story