ராமநத்தத்தில் மளிகை கடைக்காரர் மொபட்டில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் திருட்டு
ராமநத்தத்தில் மளிகை கடைக்காரர் மொபட்டில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்,
திட்டக்குடி அடுத்த கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் மகன் குமரேசன்(வயது 27). இவர் அதே ஊரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் குமரேசன் தனது கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் ராமநத்தத்திற்கு புறப்பட்டார்.
அப்போது வரும் வழியில் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் ஒரு வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தார். பின்னர் ரூ.60 ஆயிரத்தை தனது மொபட் சீட்டின் பெட்டியில் வைத்து விட்டு ராமநத்தத்தில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
திருட்டு
இந்த நிலையில் மீண்டும் ஒரு வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதற்காக குமரேசன், தனது மொபட்டில் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு வந்தார். பின்னர் தனது மொபட் சீட்டை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிா்ச்சியடைந்த குமரேசன், தான் வந்த வழியாக சென்று பார்த்தார். இருப்பினும் அந்த பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து குமரேசன் தான் பொருட்கள் வாங்க வந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்தார். அப்போது பொருட்கள் வாங்குவதற்காக கடை முன்பு மொபட்டை நிறுத்தி வைத்திருந்தபோது, அங்கு வந்த 2 பேர் சீட்டின் பெட்டியை உடைத்து ரூ.60 ஆயிரத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.