மாடியில் இருந்து தவறி விழுந்த திருடன் படுகாயம்
பெரம்பலூரில் தப்பி ஓட முயன்றபோது மாடியில் இருந்து தவறி விழுந்த திருடன் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாடியில் இருந்து தவறி விழுந்த திருடன்
பெரம்பலூர் எம்.எம். நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவரின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த கணேசன் எழுந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது அங்கு மர்ம ஆசாமி ஒருவர் கதவு திறந்து உள்ளே வந்து நின்று கொண்டிருந்ததார்.
இதனை கண்ட கணேசன் இதுகுறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த ஆசாமியை பிடிக்க அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதனை கண்ட அந்த மர்ம ஆசாமி கணேசன் வீட்டின் மாடியில் ஏறி, அருகே உள்ள வீட்டின் மாடிக்கு தாவி குதித்து தப்பிக்க முயன்றான். அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்த மர்ம ஆசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
தீவிர சிகிச்சை
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஆசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டன. இதையடுத்து அவர் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணையில், அவர் குன்னம் தாலுகா, மழவராயநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த சக்திவேல் (46) என்பது தெரியவந்தது. அவர் கணேசன் வீட்டில் திருடுவதற்தாக வந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.