3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பட்டுசாலிய தெருவை சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவருடைய மகன் சூர்யா (வயது26). இவர் மீது கொலை வழக்கு உள்ளது. இதேபோல் பாபநாசம் தாலுகா புரசங்காடு தோப்புத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜ்குமார் (32) மீதும், திருவிடைமருதூர் தாலுகா கூத்தனூர் வடக்கு தெருவை சேர்ந்த ரவி மகன் ஜீவன்ராஜ் (29) மீதும் பாலியல் வழக்கு உள்ளது.
இவர்கள் 3 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா பரிந்துரையின்பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகியோர் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தனர்.
இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து சூர்யா, ராஜ்குமார், ஜீவன்ராஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இவர்கள் 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.