மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து ஆட்டை கொன்ற புலி
பேச்சிப்பாறை அருகே தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலி மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து ஆட்டை கடித்து கொன்றதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குலசேகரம்,
பேச்சிப்பாறை அருகே தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலி மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து ஆட்டை கடித்து கொன்றதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புலி அட்டகாசம்
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புலி புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 5-ந் தேதி மோகன்தாஸ் என்பவருடைய ஆட்டை கவ்வி சென்ற புலி 8-ந் தேதி அதே குடியிருப்பில் சுரேஷ்குமார் என்ற தொழிலாளியின் வீட்டின் அருகில் கட்டப்பட்டிருந்த மாட்டையும் கடித்து குதறியது.
இதனால் கடந்த 10 நாட்களாக அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். வனத்துறையினரும் புலி நடமாட்டம் பற்றி கண்டறிய 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஆனால் இதுவரை புலியின் உருவம் கேமராக்களில் பதிவாகவில்லை. அதே சமயத்தில் அந்த பகுதியில் பதிவாகி உள்ள கால்தடம் ஏறக்குறைய புலி கால்தடம் என்றே வனத்துறையினர் கருதுகின்றனர்.
மேலும் இந்த கால்தடம் நிலத்தில் அழுத்தமாக பதிந்துள்ளதால் அது ஒரு வயதான பெண் புலியின் கால் தடமாக இருக்கும் என கூறுகிறார்கள். இதுதவிர அங்கு இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆட்டை கவ்வி கொன்றது
இந்தநிலையில் சிற்றாறு தொழிலாளர் குடியிருப்புக்கு 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள மூக்கறைக்கல் பழங்குடி குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் புலி புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. அதாவது சுந்தரி என்ற பழங்குடி பெண்ணின் வீட்டின் அருகில் கட்டப்பட்டிருந்த ஆட்டை புலி கடித்து தூக்கிச் செல்ல முயன்றது.
அந்த சமயத்தில் சத்தம் கேட்டு சுந்தரி மற்றும் அவருடைய குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்த போது புலி ஆட்டை கவ்விக் கொண்டு மண்மேடான பகுதி நோக்கி மெதுவாகச் சென்றது.
இந்த காட்சியை பார்த்த அவர்கள் தொடர்ந்து சத்தம் போட்டதால் புலி கவ்விச் சென்ற ஆட்டை அங்கேயே போட்டு விட்டு ஓடியது. ஆனால் புலியின் வாயில் சிக்கிய ஆட்டை இறந்த நிலையில் தான் மீட்க முடிந்தது. இதனால் சிற்றாறு குடியிருப்பை தொடர்ந்து மூக்கறைக்கல் பழங்குடி மக்களையும் புலி அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
பழங்குடியின பெண் அதிர்ச்சி தகவல்
புலியை நேரில் பார்த்த சுந்தரி கூறுகையில், "நான் ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் ஆடு, மாடு மேய்த்து வருகிறேன். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் குழந்தைகளை படிக்க வைக்கிறேன். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு புலி வந்து எனது பசுமாட்டைக் கடித்துச் சென்றது. அப்போது ஏதோ சாதாரண விலங்கு தான் பசுமாட்டை கடித்துள்ளது என வெளியே சொல்லாமல் இருந்து விட்டேன். இப்போது புலி வந்து ஆட்டைக் கடித்து தூக்கிச் சென்றதை நேரில் பார்த்த பிறகு தான் அந்த சம்பவமும் புலியின் அட்டகாசம் தான் என்று நினைக்கிறேன். எனவே எங்களுடைய உயிரை காப்பாற்ற வனத்துறையினர் புலியை கூண்டு வைத்து பிடித்து அகற்ற வேண்டும்" என்றார்.
கூண்டு வைக்கப்படுமா?
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியதாவது:-
புலியின் நடவடிக்கை தொடர்பாக இப்போது புலிகளின் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைப்பான தேசிய புலிகள் பாதுகாப்பு குழுமத்திற்கு என்டிசிஏ அறிக்கை கொடுத்துள்ளோம். இந்த அமைப்பின் அறிவுரையின் படி ஒரு குழு அமைக்க உள்ளோம். இந்த குழுவில் திருநெல்வேலி மண்டல வன பாதுகாவலர், மாவட்ட வன அலுவலர், களியல் வனச்சரகர், கடையல் பேரூராட்சி தலைவர் மற்றும் ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஆகியோர் இருப்பார்கள்.
இந்த குழு 17-ந் தேதி முதல் புலியை மக்கள் பார்த்ததாக சொல்லும் இடங்கள், கேமரா காட்சிகள் மற்றும் புலியின் கால்தடம் பதிவான இடங்களை ஆய்வு செய்து புலி நடமாடும் இடங்கள் தொடர்பாக ஒரு வரைபடம் தயாரிப்பார்கள். இதைத் தொடர்ந்து புலியை பிடிக்கலாமா?, மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்லலாமா? என்பது குறித்து கண்டறிய ஒரு கால்நடை மருத்துவரை புலிகள் பாதுகாப்பு குழுமம் நியமிக்கும். பின்னர் வன கால்நடை மருத்துவர் இங்கு வருவார். அதன் பிறகு கூண்டு வைத்து புலியை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்குவோம். அதே வேளையில் அட்டகாசத்தில் ஈடுபடும் புலியால் வேகமாக செல்ல முடியவில்லை என்றே கருதுகிறோம். விலங்குகளை குறி வைத்து கடித்து வரும் இந்த புலி மக்களை ஒன்றும் செய்யாது. ஏற்கனவே ஒரு ஆட்டுக்கான இழப்பீடு கொடுத்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.