வேட்டை தடுப்பு காவலரை புலி தாக்கியது


வேட்டை தடுப்பு காவலரை புலி தாக்கியது
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் புலி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் அடைந்தார். அவர் உயிர் தப்பிக்க புலியுடன் கட்டி புரண்டு போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

முதுமலையில் புலி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் அடைந்தார். அவர் உயிர் தப்பிக்க புலியுடன் கட்டி புரண்டு போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புலி தாக்கி படுகாயம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், செந்நாய்கள், காட்டெருமைகள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் லைட் பாடி, கேம்ப்பாடி, தேக்கம்பாடி ஆதிவாசி கிராமங்கள் உள்ளது. இதில் லைட்பாடி பகுதியை சேர்ந்த பொம்மன் (வயது 33) என்பவர் முதுமலையில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று தனது வீட்டில் இருந்து பொம்மன் வெளியே வந்தார். பின்னர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சற்று தூரம் நடந்து சென்றார். அப்போது புதருக்குள் படுத்து கிடந்த புலி ஒன்று திடீரென பொம்மன் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத பொம்மன் கீழே விழுந்தார். தொடர்ந்து புலி அவரை தாக்கியது. மேலும் பொம்மன் உயிர் தப்பிக்க புலியுடன் கட்டி புரண்டு சண்டை போட்டார். இதில் பொம்மனின் தலை, முதுகு, கைகளில் படுகாயம் ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

பின்னர் அவர் புலியிடம் இருந்து தப்பிக்க அப்பகுதியில் கிடந்த கட்டையை எடுத்து தாக்க முயன்றார். அப்போது புலி பொம்மனை விட்டு அங்கிருந்து ஓடியது. இதனிடையே சத்தம் கேட்டு வனத்துறையினர் மற்றும் ஆதிவாசி மக்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த பொம்மனை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, வனச்சரகர்கள் மனோஜ், மனோகரன், வனவர் சந்தனராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏசுமரியான் உள்ளிட்டோர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் ஆதிவாசி மக்கள் மற்றும் வனத்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story