ஊருக்குள் புகுந்து மாட்டை அடித்துக்கொன்ற புலி


ஊருக்குள் புகுந்து மாட்டை அடித்துக்கொன்ற புலி
x

தாளவாடி அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த புலி மாட்டை அடித்துக்கொன்றது.

ஈரோடு

தாளவாடி:

தாளவாடி அருகே பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த புலி மாட்டை அடித்துக்கொன்றது.

10 வனச்சரகங்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது சிறுத்தைகள் வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை கடித்து கொன்று உள்ள சம்பவம் நடந்து உள்ளது.

ஊருக்குள் புகுந்த புலி

இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள கிராமத்துக்குள் புலி புகுந்த சம்பவமும் நடந்து உள்ளது.

தாளவாடியை அடுத்த சேசன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 48). விவசாயி. இவர் 6 மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த 6 மாடுகளையும் அவர் தன்னுடைய தோட்டத்தில் மேய்ச்சலுக்காக நீள கயிற்றில் கட்டி விடுவார். அதன்படி நேற்று காலை வழக்கம்போல் தன்னுடைய மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டி இருந்தார். மதிய வேளையில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் திடீரென சத்தம் போட்டு கத்தின.

அடித்துக்கொன்றது

மாடுகளின் சத்தம் கேட்டு செல்வகுமார் தோட்டத்துக்கு ஓடினார். அப்போது அங்கு மாடு ஒன்றை புலி ஒன்று கடித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தத்தை கேட்டதும், மாட்டை விட்டு விட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. புலி கடித்ததில் அந்த மாடு இறந்துவிட்டது. மேலும் ஒரு மாடு படுகாயம் அடைந்தது.

கூண்டு வைத்து பிடிக்க...

உடனே அவர் இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மாட்டை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் மாட்டை கடித்துக்கொன்றது புலி என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். பட்டப்பகலில் கிராமத்துக்குள் புகுந்து மாட்டை புலி கடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story