மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x

மத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மதுரை,

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகள் 1500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் நேற்று நடந்தது.

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சேடப்பட்டி முத்தையாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் அமைச்சர்கள் ரகுபதி, பெரிய கருப்பன், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,500 பேருக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதைதொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

நேரம் வந்து விட்டது

மத்திய பா.ஜனதா அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த ஊழல்களை சி.ஏ.ஜி. வெளிக்கொண்டு வந்துள்ளது. அந்த அறிக்கையில், ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க ரூ.250 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாரத பிரதமர் கேர் நிதிக்கு எந்த ஒரு கணக்கும் கிடையாது. இதுகுறித்து கேட்டால் யாருக்கும் தகுதி இல்லை என்கிறார்கள். பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பேசுவது, தி.மு.க. ஆட்சியில் வாழ்வது கருணாநிதி குடும்பம்தான் என்கிறார். ஆமாம் கருணாநிதி குடும்பம் என்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள குடும்பங்கள்தான். நீங்கள் 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து என்ன செய்தீர்கள், 15 லட்சம் தருவீர்கள் என்று சொன்னீர்கள். ஆனால் இதுவரை தரவில்லை. ஆனால் முதல்-அமைச்சர், மகளிருக்கு ரூ.1,000 தருவோம் என்று சொன்னார். அதை தற்போது வழங்கி உள்ளார்.

2013-ல் மோடி இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்று கூறினார். இந்தியாவை பாரத் என்று மாற்றப்போகிறார். இப்படிப்பட்ட மத்திய பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story