பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்
தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கவுரவ தலைவர் ஹரிகரமுத்து தலைமை தாங்கினார். தலைவர் ஜே.பி.சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆலோசகர்கள் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் சங்கத்தின் 2-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் அழைப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து கவுரவ தலைவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில், சீன பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும். தீபாவளியையொட்டி விதிக்கப்பட்டுள்ள பட்டாசு நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். பழனி-ஈரோடு ரெயில்பாதை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பழனியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும், பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.