பிரதமர் மோடியால் கச்சத்தீவை மீட்கும் காலம் வரும்


பிரதமர் மோடியால் கச்சத்தீவை மீட்கும் காலம் வரும்
x

பிரதமர் மோடியால் கச்சத்தீவை மீட்கும் காலம் வரும் என்று விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்

விழுப்புரம்

விழுப்புரம்

பொதுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் 8 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவதியாகராஜன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத், செயலாளர்கள் வினோஜ், செல்வம், மீனாட்சி நித்தியசுந்தர், அஸ்வத்தாமன், விவசாய அணி தலைவர் நாகராஜ், தேசிய சிறுபான்மை அணி செயலாளர் இப்ராஹிம், மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன், கடலூர் மாவட்ட பார்வையாளர் கலிவரதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஊழல் இல்லாத ஆட்சி

8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் இல்லாத நிலை உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியதுதான் அவரது சாதனை. நிலையான ஆட்சியை நாட்டுக்கு வழங்கிய பிரதமர் மோடி மட்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் நம்முடைய நிலை பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும். குடும்ப ஆட்சி என்பது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமே இலங்கைதான்.

தி.மு.க. ஒரு பலமில்லாத கட்சியாக திகழ்ந்து வருவதால்தான் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சி நடத்தி விடலாம் என நம்புகிறது.

கச்சத்தீவை மீட்கும் காலம்

இளைஞர்களை அதிகம் கவர்ந்த கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது. குறிப்பாக அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு குழந்தைகளும், இளைஞர்களும் பா.ஜ.க.வின் ஆதரவு நிலைக்கு வந்துள்ளதுடன், பா.ஜ.க.வுக்கு வாக்கு சேகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்துவருகிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.கச்சத்தீவை தாரை வார்த்தது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியும், முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியும்தான். ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு கச்சத்தீவை மீட்போம் என வாக்குறுதி கொடுக்கிறது. அவர்களால் கச்சத்தீவை மீட்க முடியாது. பிரதமர் மோடி மனது வைத்தால்தான் கச்சத்தீவை மீட்க முடியும். கச்சத்தீவை மீட்கும் காலம் வரும்.

தொடர்ந்து நீடிக்கும்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி இன்னும் 80 ஆண்டுகளானாலும் தொடர்ந்து நீடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாண்டியன், ஜெயக்குமார், பொருளாளர் சுகுமார், செஞ்சி தொகுதி பொறுப்பாளர் கோகுல், விவசாய அணி துணைத்தலைவர்கள் சுரேஷ், பழனி, சந்திரமோகன், நகரமன்ற கவுன்சிலர் வடிவேல்பழனி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், நிர்வாகிகள் தாஸசத்யன், துரைசக்திவேல், சத்யநாராயணன், சதாசிவம் சின்ராஜ், கோபிநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் நகர தலைவர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.


Next Story