திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
திருவாரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
ஆயுத பூஜையை முன்னிட்டு திருவாரூர் கடைவீதியில் பொரி, பூ, பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுதபூஜை
இந்துக்களின் முக்கிய பண்டிகையாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆயுதபூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த பூஜையின் போது பொரி, அவல், பொட்டுக்கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல், தேங்காய், பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.
பூக்களின் விலை உயர்வு
விழாவை முன்னிட்டு நேற்று திருவாரூர் கடைவீதியில் பூ, பொரி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பூஜையில் முக்கிய இடத்தை வகிக்கும் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதில் மல்லி, முல்லை கிலோ ரூ.1000, ஜவ்வந்தி, அரளி கிலோ ரூ.500, ரோஜா கிலோ ரூ.300 என விற்பனை செய்யப்பட்டது. வழக்கமான விலையை விட 5 மடங்கு விலை கூடுதலாக பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.
ஆயுத பூஜையில் இடம் பெறும் பொரி, பொட்டுக்கடலை, அவல், வெல்லம் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. மேலும் பூஜை முடிவில் திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் பூசணிக்காய், இதை தவிர ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் தேங்காய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
தூய்மை பணி
வணிக நிறுவனங்கள், கடைகளில் தூய்மை பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அரசு நிறுவனங்கள், அனைத்துத்துறை அலுவலங்களில் ஆயுதப்பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று ஆயுதபூஜையை கொண்டாடினர். அரசு வாகனங்கள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து சந்தனத்தால் அலங்கரித்து, வாழை கன்றுகள், தோரணங்கள் கட்டி ஊர்வலமாக சென்று வந்தனர். அனைத்து வீடுகளிலும் சுத்தம் செய்து கழுவி, தங்களது வாகனங்களை தூய்மை செய்து ஆயுத பூஜையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.