பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் மழை வெள்ளம்
ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சியில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மழையுடன் கூடிய பனிபொழிவும் உள்ளதால் கடுமையான குளிர் காற்று வீசி வருகிறது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
ஜமுனாமரத்தூர் அருகில் உள்ள சேராமந்தை, வாழக்காடு, நாச்சாமலை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் மலை பாதையில் மழைநீர் செல்வதால் பொதுமக்கள் வெளியில் சென்று வர முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அந்த பகுதியில் ஓடைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு வழியின்றி தவித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஜமுனாமரத்தூரில் பீமன் நீர்வீழ்ச்சி உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணத்தினால் பீமன் நீர்வீழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
வழக்கமாக பீமன் நீர்வீழ்ச்சியை காண பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
தற்போது அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீமன் நீர்வீழ்ச்சிக்கு வந்து செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.