முழு சந்திர கிரகணத்தை திருச்சியில் காணமுடியவில்லை
முழு சந்திர கிரகணத்தை திருச்சியில் காணமுடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முழு சந்திர கிரகணத்தை திருச்சியில் காணமுடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சந்திரகிரகணம்
முழு நிலவு நாளில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது சந்திர கிரகணம் ஆகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும். நேற்று முழு சந்திர கிரகணம் காணப்பட்டது.
ஏற்பாடு
இந்திய நேரப்படி முழு சந்திர கிரகணம் பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடைந்தது. முழு கிரகணம் 3.48 மணியில் இருந்து 5.13 மணி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக திருச்சியில் நேற்று மாலை 5.48 மணிக்கு தான் சந்திரன் உதயமாகும் என்றும், இதனால் முழுகிரகணத்தை காண முடியாது. ஆனால் பகுதி கிரகணத்தை காணலாம் என்றும், அதுவும் சந்திரன் உதித்த சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பொதுமக்கள் ஏமாற்றம்
இந்தநிலையில் நேற்று இந்தியாவின் பல பகுதிகளில் சந்திர கிரகணம் தென்படவில்லை. திருச்சியிலும் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சந்திரகிரகணத்தை காணமுடியவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந்தேதி காணலாம். இந்த கிரகணம் இந்தியாவில் முழுமையாக தெரியும் என்று திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன் தெரிவித்துள்ளார்.