கம்பம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
கம்பம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
கம்பத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59). டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் இவர், கம்பம் அருகே க.புதுப்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டார். பின்னர் மாலையில் வேலையை முடித்துவிட்டு, தோட்டத்தில் இருந்து வெளியே செல்வதற்காக நாகராஜ் அங்கிருந்த மேடான பகுதியில் டிராக்டரை ஓட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில், டிராக்டரின் இடிபாடுகளில் சிக்கிய நாகராஜ் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.