வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்த வியாபாரி


வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்த வியாபாரி
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் வியாபாரி ஒருவர் தனது வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சலில் வியாபாரி ஒருவர் தனது வீட்டில் புகுந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தார்.

வியாபாரி வீடு

'பாம்பு என்றால் படையும் நடுங்கும்' என்பது பழமொழி. பாம்பை கண்டால் பொதுவாக அனைவரும் பயப்படுவார்கள். இதனால் வீட்டிலோ, தோட்டத்திலோ பாம்பு புகுந்து விட்டால் அதை பிடிக்க தீயணைப்பு நிலையத்துக்கோ, வனத்துறையினருக்கோ தகவல் கொடுப்பார்கள். அவர்கள் கம்பி உள்ளிட்ட உபகரணங்களுடன் வந்து பாம்பை பிடித்து செல்வது வழக்கம். ஆனால் இங்கு ஒரு வியாபாரி தனது வீட்டில் புகுந்த பாம்பை அவரே துணிச்சலுடன் பிடித்து தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்த விவரம் வருமாறு:-

குளச்சலை சேர்ந்தவர் சாதிக் (வயது45), வியாபாரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊரில் கடை நடத்தி வருகிறார்.

பதுங்கி இருந்த பாம்பு

இவருடைய வீட்டில் சமையல் அறையில் சுவரின் வெளிப்பக்கத்தில் இருந்து கியாஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் கியாஸ் தீர்ந்து போனதால் சாதிக் மாற்றுச்சிலிண்டர் பொருத்த முயன்றார். அப்போது சிலிண்டருக்கு அடியில் ஒரு நல்ல பாம்பு பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சாதிக்கை கண்டதும் அந்த பாம்பு படம் எடுத்து சீறியது. ஆனால் பாம்பை பார்த்து அவர் அச்சமடையவில்லை. மாறாக அதை பிடித்து அப்புறப்படுத்த நினைத்தார். பாம்பு அவரை பார்த்து சீறிக்கொண்டே இருந்தது. அவர் அதன் கவனத்தை திசை திருப்பி சாதுர்த்தியமாக பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்தார். அது சுமார் 2 அடி நீளம் இருந்தது.

தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைப்பு

பின்னர் அதை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று குளச்சல் தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்கள் அந்த பாம்பை பாதுகாப்பாக காட்டில் விட்டனர். வீட்டில் புகுந்த பாம்பை துணிச்சலுடன் பிடித்து தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்த சாதிக்கை பலரும் பாராட்டினர்.


Next Story