அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதம்


அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதம்
x

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தரைக்கடைகளை அகற்றக்கூறியதால் வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தரைக்கடைகளை அகற்றக்கூறியதால் வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தரைக்கடை வியாபாரிகள்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கீரனூர் டவுன் பஸ் நிற்கும் இடத்திற்கு அருகில் 26 பேர் கொய்யாப்பழம், மாம்பழம் உட்பட அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தரைகளிலும், தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்று வருகிறார்கள். இவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை அகற்ற உத்தரவிட்டனர்.

அதன்படி, பொன்மலை மண்டல உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அந்த இடத்தில் உள்ள கடைகளை நேற்று காலை அகற்ற முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க செயலாளர் செல்வி ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் திரண்டு மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும் தரையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

அப்போது, உதவி ஆணையரிடம் கடைகளை அப்புறப்படுத்தக்கூடாது என்றும், அதற்காக ஐகோர்ட்டில் தடையாணை பெற்றுள்ளோம் என்றும் வாக்குவாதம் செய்தனர். அதற்கு, திங்கட்கிழமை மாநகராட்சிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கடை போடலாம் என்று அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர். ஆனால் வியாபாரிகள் அதற்கு உடன்படாமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர்.

ஆனாலும் மாநகராட்சி ஊழியர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல், கடைகளை அப்புறப்படுத்தினார்கள். பின்னர், கோர்ட்டு தடை உத்தரவு உள்ளது. எங்களை கடை நடத்த அனுமதிக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பரபரப்பு

இதைத்தொடர்ந்து வியாபாரிகள் பலர் கடைகளை அங்கேயே அமைத்தனர். மாநகராட்சி ஆணையரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்களை தொடா்ந்து கடை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story