போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஊட்டி நகராட்சி வருவாய் அலுவலர் அவதூறாக பேசியதாக கூறி மார்க்கெட் வியாபாரிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி வருவாய் அலுவலர் அவதூறாக பேசியதாக கூறி மார்க்கெட் வியாபாரிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் நிலையம் முற்றுகை
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,500 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சிலர் சரியாக வாடகை செலுத்தவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் புதிதாக பொறுப்பேற்ற நகராட்சி வருவாய் அலுவலர் சண்முகம், நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு வந்து வியாபாரிகளிடம் கடை வாடகையை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். அப்போது வியாபாரிகள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய் அலுவலர் தகாத வார்த்தையால் வியாபாரிகளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வருவாய் அலுவலரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று மார்க்கெட்டில் வியாபாரிகள் ஒன்று திரண்டனர். வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா முகமது, செயலாளர் குலசேகரன் மற்றும் வியாபாரிகள் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புகார் மனு
இதைத்தொடர்ந்து அவதூறாக பேசிய நகராட்சி வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். இதுகுறித்து சங்க தலைவர் ராஜா முகமது கூறும்போது, வியாபாரிகள் வாடகை நிலுவை தொகையை பெரும்பாலும் செலுத்தி விட்டனர். மீதம் உள்ள தொகையையும் இந்த நிதியாண்டுக்குள் கட்டி விடுவார்கள். வியாபாரிகளை அவதூறாக பேசிய அதிகாரி மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்றார். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் கூறுகையில், நகராட்சி மார்க்கெட்டு கடை வாடகை மூலம் ஆண்டுக்கு ரூ.36 கோடி வசூலிக்கப்படும். ஆனால், இதுவரை ரூ.11 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. ரூ.25 கோடி நிலுவை உள்ளது. இதற்கிடையே கடந்தாண்டு ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதம் என 3 தவணை கால அவகாசமும் வழங்கப்பட்டு விட்டது. இந்த தொகையை வசூலிக்காவிட்டால் நகராட்சி அலுவலருக்கு சிக்கல் ஏற்படும். எனவே, வியாபாரிகள் வாடகையை விரைந்து செலுத்த வேண்டும். மேலும் நகராட்சி அலுவலர் தவறாக பேசியதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.