மரம் சாய்ந்து 4 மின் கம்பங்கள் முறிந்தன


மரம் சாய்ந்து 4 மின் கம்பங்கள் முறிந்தன
x
தினத்தந்தி 24 April 2023 1:00 AM IST (Updated: 24 April 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கோடை மழையால் மரம் சாய்ந்து 4 மின் கம்பங்கள் முறிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கோடை வெயிலால் அவதி

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த வாரம் 105.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. கொளுத்தும் வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அனல் காற்றால் சாலையில் நடமாடவே பொதுமக்கள் தயங்கி செல்வதை காணமுடிகிறது. இரவில் ஏற்படும் கடுமையான புழுக்கத்தால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் மாலை குளிர்ந்த காற்று வீசியது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நள்ளிரவில் பலத்த சூறைக்காற்றுடன் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.

4 மின் கம்பங்கள் முறிந்தன

சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் பெய்த இந்த கோடை மழையால் வெயிலின் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சீதோஷணநிலை ஏற்பட்டது. இந்தநிலையில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கோட்டை ஜலால்கான் தெருவில் பெரிய மரம் ஒன்று சாய்ந்து மின் கம்பிகள் மீது விழுந்தது.

இதனால் அதன் அருகே இருந்த அடுத்தடுத்த 4 மின்கம்பங்கள் முறிந்து, சாலையில் விழுந்தன. மேலும் மின் கம்பிகளும் அறுந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

மரம் வெட்டி அகற்றம்

பின்னர் மின்வாரிய அலுவலர்கள் அங்கு சென்று சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின்சார வினியோகம் செய்யப்பட்டது. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் சாய்ந்த மரத்தை எந்திரம் மூலம் வெட்டி, அங்கிருந்து அகற்றினர்.

இதேபோல் ஆத்தூர், தலைவாசல், தம்மம்பட்டி பகுதிகளிலும் கோடை மழை பெய்தது.


Next Story