வீட்டின் மீது மரம் விழுந்தது; மாமியார்-மருமகள் படுகாயம்
குலசேகரம் அருகே நள்ளிரவில் வீட்டின்மீது மரம் விழுந்தது. இதில் மாமியார்-மருமகள் படுகாயம் அடைந்தனர்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே நள்ளிரவில் வீட்டின்மீது மரம் விழுந்தது. இதில் மாமியார்-மருமகள் படுகாயம் அடைந்தனர்.
மரம் விழுந்தது
குலசேகரம் அருகே பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட அரியாம்பகோடு பகுதியில் கூலித்தொழிலாளி விஜயன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகில் உள்ள முதிர்ந்த ராட்சத அயனி மரம் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வேரோடு சாய்ந்தது.
மாமியார்-மருமகள் படுகாயம்
இதில் வீட்டின் சமையல் அறையில் இருந்த விஜயனின் மனைவி சரோஜினி (வயது 43), நடுக்கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவருடைய மாமியார் லீலா (65) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
ஆனால் அறையில் தூங்கி கொண்டிருந்த விஜயன், மகன்கள் ஆகாஷ் (18), அபிஷேக் (16) ஆகியோர் காயமின்றி தப்பினர். மரம் சாய்ந்த சத்தம், லீலா மற்றும் சரோஜினி உள்பட வீட்டில் உள்ளவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் மரக்கிளைகளை அகற்றி வீட்டுக்குள் இடிபாடுகளில் சிக்கிக்கிடந்தவர்களை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த லீலா மற்றும் சரோஜினியை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவத்தில் விஜயனின் வீட்டில் இருந்த பூனை மற்றும் 3 புறாக்கள் இறந்தன. மேலும் சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.