அகழியை தூர்வார வேண்டும்
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க முதுமலை-ஸ்ரீமதுரை எல்லையில் உள்ள அகழியை தூர்வார வேண்டும் என வனத்துறையினரிடம் ஊராட்சி மக்கள் நேரில் முறையீட்டனர்.
கூடலூர், ஜூன்.12-
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க முதுமலை-ஸ்ரீமதுரை எல்லையில் உள்ள அகழியை தூர்வார வேண்டும் என வனத்துறையினரிடம் ஊராட்சி மக்கள் நேரில் முறையீட்டனர்.
பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்
கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளா மற்றும் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகள் நேற்று முன்தினம் ஊராட்சிக்கு உட்பட்ட வடவயல் பகுதியில் வாழை, பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அகழியை தூர்வார வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், முதுமலை- ஸ்ரீமதுரை எல்லையோரம் ஏற்கனவே உள்ள அகழிகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. எனவே அகழியை முறையாக தூர்வார வேண்டும். இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனறு தெரிவித்தனர்.
இந்த நிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதுமலை-ஸ்ரீ மதுரை எல்லையோரம் உள்ள அகழியை தூர்வார வேண்டும் என ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் பொதுமக்கள் நேற்று கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டனர்.
தொடர்ந்து முதுமலை கார்குடி வனச்சரகர் விஜயனை சந்தித்து இதே கோரிக்கையை வைத்தனர். அதற்கு அவர் அரசு நிதி ஒதுக்கியவுடன் அகழியை தூர்வாரும் பணி நடைபெறும் என உறுதி அளித்தார். அதுவரை காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம். தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.