வள்ளலாரின் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சியில் வள்ளலாரின் முப்பெரும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் இந்து சமய அறநிலை துறை சார்பில் வள்ளலாரின் 200-வது ஆண்டு தொடக்க விழா, பசி, பிணி, மருத்துவர் சாலையாம், சத்திய தருமச்சாலை தொடங்கிய 156-வது ஆண்டு தொடக்க விழா, ஜோதி தரிசனத்தின் 152-வது ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவகுமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சிவகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றுதல், திருவருட்பா அகவல் பாராயணம் ஓதுதல் மற்றும் சமரச சுத்த சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து வள்ளலாரின் 200-வது ஆண்டு அருள்நெறி பரப்புரை பேரணி நடைபெற்றது. மந்தைவெளியில் இருந்து தொடங்கிய பேரணி கவரைத்தெரு, சேலம் மெயின்ரோடு வழியாக விழா நடந்த திருமண மண்டபத்தை வந்தடைந்தது. தொடர்ந்து திருவருட்பா இசை நிகழ்ச்சி, சன்மார்க்க சான்றோர்க்கு பாராட்டும், மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து அருட்பா நாட்டிய நிகழ்ச்சியும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வள்ளலாரின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.